ஆக்கிரமிப்புகாரர்கள் மிரட்டியதால் மனமுடைந்த பெண் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள ஈரியூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவருக்கு அம்சா(30) என்ற மனைவியும், ரணீஸ்(11), சபரீஸ்வரன்(9) என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்த நிலையில் இதுகுறித்து அம்சா கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் அம்சாவை தரக்குறைவாக பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அம்சா தனது மகன்கள் இருவருக்கும் விஷத்தை குடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைதொடர்ந்து வீட்டிற்கு வந்த ரமேஷ் மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அம்சா விஷம் குடிப்பதற்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து, ஆக்கிரமிப்புகாரர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பேசி செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அதில் அம்சா, எங்களுக்கு போலீசும் உதவி செய்யவில்லை, இதனால் வாழவழி இல்லாமல் தற்கொலைக்கு முடிவெடுத்தாக கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.