நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா, அதன் வங்கி சேவைகளை எளிதாக பெற அண்மையில் சில டோல்ப்ரீ எண்களை அறிவித்தது. இதன் வாயிலாக எஸ்பிஐ-யில் சில நிதிசேவைகளை மிக எளிதில் பெறலாம். அதை டோல் ப்ரீ எண்களை தொடர்புகொள்வதன் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை வங்கி வேலைநாட்களில் மட்டும் அல்ல, வங்கி வேலை நேரத்தில் மட்டும் அல்ல, எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கென வங்கிக்கு போக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதையடுத்து தற்போது வாட்ஸ்அப் பேங்கிங் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த வாட்ஸ்அப் வங்கிசேவையை பெறுவதன் வாயிலாக சேமிப்புக் கணக்கின் இருப்பை அறிந்து கொள்ளுதல் மற்றும் மினி நிதி நிலை அறிக்கை பெறுதல் என பல வசதிகளை பெறமுடியும். இந்த சேவையை பெற பதிவுசெய்தல் அவசியமாகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து WAREG என டைப்செய்து ஒரு இடைவெளிவிட்டு வாடிக்கையாளர் (AC NO XXXX) கணக்கு எண்ணையும் டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். வாட்ஸ் அப் சேவையை பதிவுசெய்தவுடன் SBI வங்கி எண்ணான 90226 90226 இதிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வரும். அத்துடன் 90226 90226 இந்த எண்ணுக்கு “Hi SBI” என குறுஞ்செய்தி அனுப்புங்கள். வாட்ஸ்அப் பேங்கிங் வசதிக்கு உங்களது எண் பதிவுசெய்யப்பட்டு விட்டால் Dear Customer,Welcome to SBI Whatsapp Banking Services என ஆங்கில குறுஞ்செய்தி வரும்.
அதனை தொடர்ந்து இருப்பு நிலை அறிதல், மினிநிதிநிலை அறிக்கை அறிதல், வாட்ஸ்அப் சேவை பதிவைதுண்டித்தல் ஆகிய பிரிவுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி SBI கார்டு வாடிக்கையாளர்களுக்கும் வங்கி வாட்ஸ் அப் சேவையை வழங்குகிறது. இச்சேவை வாயிலாக SBI கார்டு வாடிக்கையாளர்கள் கார்டு தொடர்பான தகவல்கள், மதிப்புக் கூட்டு புள்ளிகள், கட்டவேண்டிய தொகை ஆகிய பல வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் இன்று 01.15 மணி முதல் 03.45 மணிவரை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணி காரணமாக INB / YONO / YONO லைட் / yono வணிகம் / UPI போன்ற சேவைகள் கிடைக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.