பிரபல பாடகரான எஸ்.பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவை ஒட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார் .
நேற்று நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிரபல பாடகர் எஸ். பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து இரங்கல் தெரிவித்தனர்.
எஸ்.பி.பி மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக் ,ஷிகர் தவான், முன்னால் கிரிக்கெட் வீரர்களான ஸ்ரீகாந்த், அனில் கும்ப்ளே ,வி.வி.எஸ் லட்சுமணன், கௌதம் கம்பீர், மற்றும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் துக்கம் தெரிவித்தனர்.
இதனிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,”எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் எஸ்.பி.பி மறைந்துவிட்டார். ஒருமுறை அவரது வீட்டிற்குச் சென்றபோது எனக்கு விருப்பமான பாடலின் சில வரிகளை தனியாக பாடினார்.அந்த நாளை எப்போதும் என்னால் மறக்க இயலாது.அதேபோல் இன்னொரு முறை அவரிடமிருந்து பாடல் கேட்க வேண்டும் என்ற ஆசை இனி வாழ்நாள் முழுவதும் நிறைவேறாத கனவாகவே இருக்கும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.