இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இரு செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி வகையின் முதல் சிறிய ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு இருக்கிறது. தகவல் தொடர்பு தொலை உணர்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. அதற்காக பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி வகையாக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கை கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றது.
இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக 1250 கிலோ வரையிலும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிகிறது. இதற்கிடையே சர்வதேச விண்வெளி துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்து இருக்கின்றது. அதிக எடை கொண்ட இவ்விரு பெரிய ராக்கெட்டுகளில் செயற்கைக்கோள்களை அனுப்பும்போது செலவு அதிகமாகின்றது. அதனால் அதனை குறைக்க தற்போது மினி, மைக்ரோ, நானோ என 500 கிலோ வரை உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையிலான ராக்கெட்டுகளின் தேவை அதிகரித்து இருக்கின்றது.
இதனை கருத்தில் கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்களை இஸ்ரோ புதிதாக வடிவமைத்திருக்கிறது. அந்த வகையில் எஸ்எஸ்எல்வி வகையின் முதல் ராக்கெட் இரு செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. இதற்காக ஆறு மணிநேர கவுண்டவுன் அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி உள்ளது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏவுதலத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
*145 கிலோ எடை கொண்ட eos2 செயற்கைக்கோள் கடலோர நிலைப்பாடு, ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் இரண்டு நவீன கேமராக்கள் மூலம் ஆறு மீட்டர் அளவிற்கு துல்லியமாக படம் பிடிக்க முடிகிறது.
*ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலமாக தயாரிக்கப்பட்டிருக்கின்ற எட்டு கிலோ எடை கொண்ட ஆசாதி சாட் எனும் கல்வி சார் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மூலமாக உருவாக்கப்பட்டது.