எஸ்.கே.எம் எண்ணெய் ஆலையில் வன்முறையில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் நஞ்சை ஊத்துக்குளியில் எஸ். கே. எம் பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்தி குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம் பக்ரிகாயல் அருகே ராம்குருவா கிராம பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய காமோத்ராம் என்ற தொழிலாளியும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆலையில் ஆயில்லோடை ஏற்றிச் செல்ல டேங்கர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தபோது அந்த லாரியில் எதிர்பாராதவிதமாக திடீரென்று காமோத்ராம் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த 400க்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு விபத்தில் இறந்த காமோத்ராம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கலவரத்தை ஏற்படுத்தினர்.
இந்தக் கலவரத்தில் போலீஸ்காரர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் 38 பேரை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள இரண்டு பேரை கோவை சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஆலையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மீதமுள்ள வட மாநிலத் தொழிலாளர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.