எஸ்.கே.எம் ஆயில் நிறுவனத்தில் வாலிபர் உயிரிழந்ததை அடுத்து வடமாநில தொழிலாளர்கள் கலவரம் செய்ததில் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 10 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் நஞ்சை ஊத்துக்குளி எஸ். கே. எம் பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்தி குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம் பக்ரிகாயல் அருகே ராம்குருவா கிராம பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய காமோத்ராம் என்ற தொழிலாளியும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஆலையில் ஆயில்லோடை ஏற்றிச் செல்ல டேங்கர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தபோது அந்த லாரியில் எதிர்பாராதவிதமாக திடீரென்று காமோத்ராம் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த 400க்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு விபத்தில் இறந்த காமோத்ராம் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினார்கள்.
இத்தகவலை அறிந்த மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடமாநிலத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வடமாநில தொழிலாளர்களிடம் காவல் துறையினர் கூறியதாவது, முதலில் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அதன் பின்னர் இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் பேசி இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால் உரிய இழப்பீடு தொகை கொடுத்த பின்தான் உடலை எடுத்து போக வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது வட மாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டை, கற்களை எறிந்து கலவரம் நடத்தினார்கள். இந்தக் கலவரத்தினால் எண்ணெய் நிறுவனத்தின் முன் இருந்த காவலாளி அறை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் ஏற்பட்டு 10 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கலவரத்தில் காயம் அடைந்த காவல்துறையினர் விவரம், மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.தீபா, மொடக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் டி. ஜான்சன் பால், ஈரோடு சூரம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டு ரவிக்குமார், ஆயுதப்படை போலீஸ் முத்துக்குமார், ஆயுதப்படை போலீஸ் கார்த்திக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டு டி.பிரகாஷ், ஏட்டு பி.கதிர்வேலு ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இந்த தாக்குதலில் எண்ணெய் ஆலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10-க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள், 4 -க்கும் அதிகமான நான்கு சக்கர வாகனங்கள், போலீஸ் ஜீப் உட்பட மூன்று போலீஸ் வண்டிகளும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த வன்முறை அந்தப்பகுதியில் போர்க்கள காட்சியாக இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கவுதம் கோயல், ஜானகிராமன் பாலாஜி மற்றும் 300-க்கும் அதிகமான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வடமாநில தொழிலாளர்கள் நாலாபுறமும் தப்பித்து ஓடினார்கள். ஆனாலும் 40 -க்கும் அதிகமான வட மாநிலத் தொழிலாளர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து விபத்தில் இறந்த காமோத்ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிந்து எண்ணெய் ஆலையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.