2022 ஆம் வருடத்துக்கான இந்திய வேற்றுமை அறிக்கையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறுவது, வாழ்க்கை முறைகள் மற்றும் வேளாண் பலன்கள் ஆகிய விசயங்களை பெறுவதில் உள்ள ஒரு சார்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டு சுட்டிகாட்டப்பட்டுள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியா எனும் அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகளுக்கு 2004-05 ஆம் வருடம் முதல் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பற்றிய தரவுகள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அதன் தலைவர் அமிதாப் பெஹார் கூறியதாவது, சமூக மற்றும் நீதி நெறி சார்ந்ததுடன் அல்லாமல் பொருளாதார ரீதியிலும் சமூகத்தில் காணப்படும் வேற்றுமையால் பல்வேறு பாதகங்கள் விளைகிறது என கூறியுள்ளார்.
அந்த ஆய்வின் அடிப்படையில் சுய சம்பாத்தியம் மற்றும் பணிக்கு போகும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அல்லாத பிரிவினரைவிட குறைவான அளவில் வருவாய் பெறுகின்றனர். இதேபோல் முஸ்லிம் அல்லாதோரை விட முஸ்லிம்களும் இந்த வேற்றுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-20 ஆம் வருடம் கணக்கின்படி மாத வருவாய் பெறும் 15 முதல் அதற்கு அதிகமான வயதுடைய நகர முஸ்லிம்களின் எண்ணிக்கையானது 15.6 சதவீதம் ஆகவும், முஸ்லிம் அல்லாதவர்கள் 23.3 சதவீதமாகவும் இருக்கின்றனர் என தெரிவிக்கிறது. இதேபோல் மேற்கூறிய இருபிரிவினரில், மாதவருவாய் பெறும் பணியில் ஈடுபடும் முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் 70 % குறைவாக இருக்கின்றனர் எனவும் இதற்கு வேற்றுமை தன்மை அடிப்படையாக அமைகிறது எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.
சுய சம்பாத்தியம் பெறும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் பெறும் வருவாய் ரூபாய்.5 ஆயிரம் ஆகவும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் அல்லாதோருடனான ஊதிய வேற்றுமை 41 % என்றளவிலும் இருக்கிறது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கிராமப்புறத்தில் எடுத்துகொண்டால் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் வேலைவாய்ப்பு பெறுவதில் வேற்றுமை உணர்வை சந்திப்பது விரைவாக அதிகரித்து வருகிறது. 2019-20 ஆம் வருடம் கணக்கின்படி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவின் கூலிதொழிலாளர்களின் ஊதிய முரண்பாடு 79 % என்ற அளவில் இருக்கிறது. இதற்கு அடிப்படையாக பாகுபாடு இருக்கிறது. இந்த வேற்றுமை காணுதல் முந்திய வருடத்துடன் ஒப்பிடும்போது 10 % அதிகம் ஆகும்.
இதேபோல் கொரோனா காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான். இந்த விகிதமானது 11.8ல் இருந்து 40.9 % ஆக அதிகரித்தது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரில் 5.6 -28.3 ஆகவும், பொதுபிரிவினரில் 5.4 முதல் 28.1 ஆகவும் அதிகரித்து காணப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வருவாய் சரிவிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கையானது 13 % ஆக சரிந்தும், மற்றவர்களுக்கு 9 சதவீதம் சரிவும் காணப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களில் வருபவர்களான தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள், மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் போன்றோர் வேலைவாய்ப்பு பெறுவதில் வாழ்க்கை முறைகள், வேளாண் பலன்களை பெறுவதிலும் வேற்றுமை தன்மையை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரின் குறைந்தபட்ச மாதவருவாய் ரூபாய்.15,312 ஆகவும், பொதுபிரிவினரில் இத்தொகை ரூபாய்.20,346 ஆகவும் காணப்படுகிறது. இதன் காரணமாக எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரை விட பொதுபிரிவினர் பெறக்கூடிய குறைந்தபட்ச சம்பளம் 33 % கூடுதலாக இருக்கிறது என அறிக்கை தெரிவிக்கிறது. இதுவே சுய சம்பாத்தியத்தில் முறையே ரூபாய்.10,533 மற்றும் ரூபாய்.15,878 என்ற அளவில் இருக்கிறது. இது கிராமப்புறங்களிலும் அதிகரித்து காணப்படுகிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2004-05-ம் ஆண்டில் முஸ்லிம்கள் சந்தித்த வேற்றுமை தன்மை 59.3 % என்ற அளவிலிருந்து 2019-20 ஆம் ஆண்டில் 68.3 % என்ற அளவாக அதிகரித்துள்ளது. 16 வருடங்களில் இது 9 % அதிகமாகும்.