மறைந்த பாடகர் எஸ்.பி.பி நினைவாக ஆந்திராவில் இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உலகப் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ஆந்திராவில் நெல்லூர் என்ற பகுதியில் பிறந்ததால், அவரின் நினைவாக அங்கு இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது சிறந்த பங்களிப்பால் தெலுங்கு மக்களை உலக அளவில் பெருமை படுத்தி இருக்கிறார்.
அதனால் அவரின் நினைவாக நெல்லூர் நகரில் இசை பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து, அதில் அவருடைய வெண்கல சிலை ஒன்றை நிறுவ வேண்டும். மேலும் ஒரு சங்கீத கலாகேந்திராவை நிருதி அவரின் நினைவலைகளை அதில் பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமன்றி அவரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அவரின் பெயரில் விருது ஒன்றை நிறுவ வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் மாநிலத்தில் இசை மற்றும் கவின் கலைகளும் வளரும்”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.