கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைய சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர். நேற்று திரைப் பிரபலங்கள் பலரும் ஒன்றுகூடி அவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், அவர் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை ஒன்று நடத்தப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் பலர் கோவிலின் முன்னர் இருக்கின்ற கொடிமரத்தின் அருகே எஸ்பிபி பாடிய சங்கராபரணம் என்னும் பாடலை வாசித்து, அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
மேலும் எஸ்.பி.பி பூரண குணமடைய வேண்டி கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. அந்த சிறப்பு பூஜை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் ஐயப்பனின் புகழை பரப்பும் கலைஞர்களை கவரும் வகையில் ‘ஹரிவராசனம்’ என்ற விருதை கேரள அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த விருது எஸ்.பி.பி-க்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜா, பி.சுசிலா, கே.ஜே. ஜேசுதாஸ் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களும் இந்த விருதை பெற்றுள்ளனர்.