கோவை வடவள்ளியில் வசித்து வருபவர் என்ஜினீயர் சந்திரசேகர். கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் இவர், அ.தி.மு.க. சார்பாக வெளிவரும் நாளேட்டின் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அவர் காண்டிராக்டராகவும் இருக்கிறார். இவருடைய வீட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசின் லஞ்சஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் வடவள்ளியிலுள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். இந்த சமயத்தில் சந்திர சேகர் வீட்டில் இல்லை. ஏனெனில் அவர் சென்னை சென்றிருந்தார். இதனிடையில் சந்திரசேகரின் வீட்டுகதவுகள் அடைக்கப்பட்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. இச்சோதனையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் சந்திரசேகரின் குடும்பத்தினரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அவரது தொழில், வருமானம் பற்றி விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அதுகுறித்த ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் கோவையிலுள்ள அவரது பெற்றோர், தம்பி, சகோதரி வீடுகள் மற்றும் சந்திரசேகருக்கு நெருக்கமான பொக்லைன் காண்டிராக்டரின் வீடு, கோவை பீளமேட்டிலுள்ள அலுவலகம் உட்பட மொத்தம் 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர்.
அந்த சோதனை நடந்து கொண்டு இருந்தபோதே அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் ஒருசில அதிகாரிகள் வெளியே வந்தனர். அதன்பின் அவர்கள் தங்களது வாகனத்தில் ஏறி சென்றனர். அதனை தொடர்ந்து மற்ற அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வந்தனர். இரவு 7மணியை கடந்தும் சோதனை நடைபெற்றது. இதனிடையில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் பரபரப்பான நிலையை எட்டியுள்ள சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிரமான ஆதரவாளராக கருதப்படும் என்ஜினீயர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.