டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எதிரான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை முடிக்க அனுமதி கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து லஞ்ச ஒழிப்புத்துறை 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் எஸ் பி வேலுமணி தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் ஒப்பந்தங்களை கொடுத்ததால் 25 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ் பி வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் கட்ட விசாரணை அறிக்கையை மூன்று வாரத்தில் சமர்ப்பிக்கும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.