Categories
கால் பந்து விளையாட்டு

ஏஎஃப்சி கோப்பை: முதல் போட்டியில் மெர்சல் வெற்றிபெற்ற பாலி யுனைடெட்

ஆசிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் குரூப் ஜி பிரிவில், பாலி யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில், தேன் குவாங் நின் அணியை வீழ்த்தியது.

இந்த ஆண்டுக்கான ஆசிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான ஏஎஃப்சி கோப்பை பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இந்தோனேஷியா, வியட்நாம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 37 அணிகள் ஒன்பது குரூப் பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற குரூப் ஜி பிரிவுக்கான போட்டியில் இந்தோனேஷியாவின் பாலி யுனைடெட் அணி, வியாட்நாமைச் சேர்ந்த தேன் குவாங் நின் (Than Quang Ninh) அணியுடன் மோதியது.

ஆட்டத்தின் நான்காவது நிமிடத்திலேயே, பாலி யுனைடெட் வீரர் மடே அந்திக்காவை தள்ளிவிட்டதால், தேன் குவாங் அணியின் ஸ்ட்ரைக்கர் ஆண்ட்ரே ஃபகானுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. ஸ்ட்ரைக்கர் வெளியேறினாலும், தேன் குவாங் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, 20ஆவது நிமிடத்தில் அந்த அணியின் டுவைன் லின்ச் கோல் அடித்து அசத்தினார்.

முதல் பாதியில் கோல் அடிக்கத்தவறிய வாய்ப்பை இரண்டாம் பாதியில் நழுவ விடக்கூடாது என்று முடிவோடு, பாலி யுனைடெட் அணி களமிறங்கியது.

இதன் பலனாக, சீரான இடைவெளியில் அந்த அணி அடுத்தடுத்து கோல் அடித்தது. பாலி யுனைடெட் வீரர்களான ரஹ்மத் 46ஆவது நிமிடத்திலும், மெல்வின் பிளாடே 50, 77ஆவது நிமிடத்திலும், லிஜா ஸ்பஸ்ஜோவிக் 73ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து மிரட்டினர். இதனால், பாலி யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் தேன் குவாங் அணியை வீழ்த்தியது.

Categories

Tech |