இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களை அணுகுகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் மின்னணு கட்டணம் போன்ற வசதிகள் இருந்தாலும் ரொக்க பணம் பரிவர்த்தனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அதனால் ஏடிஎம்கள் இன்றும் அத்தியாவசிய தேவையாக உள்ளன. அப்படி ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது பெரும்பாலும் கிழியாத மற்றும் பாதிக்கப்படாத நல்ல ரூபாய் நோட்டுகள் தான் வரும்.
இருந்தாலும் ஒரு சில நேரங்களில் உங்களுக்கு கிழிந்த நோட்டுகள் வந்தால் அதனை கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் வாங்க மாட்டார்கள். இந்த நோட்டுக்களை வங்கிகளில் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதற்கான விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. அதன்படி வங்கி கிளைகளில் கிழிந்து அல்லது பாதிக்கப்பட்ட நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். வங்கிகளால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது.
அப்படி வங்கிகள் கிழிந்த ரூபாய் நோட்டை ஏற்க மறுத்தால் வங்கிகள் மீது அபராதம் விதிக்கப்படும். ஏடிஎம்களில் கிழிந்த நோட்டு,பாதிக்கப்பட்ட நோட்டை மற்றும் பாதி நோட்டு போன்றவை வந்தால் அதனை ஏடிஎம் சம்பந்தப்பட்ட வங்கிகளில் கொடுத்து எளிதாக மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயம் தீயால் கடுமையாக எரிந்த ரூபாய் நோட்டை மாற்ற வேண்டுமென்றால் ரிசர்வ் வங்கியை தான் நீங்கள் அணுக வேண்டும்.