Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் கார்டை புதுப்பியுங்க…. நம்பி ஏமாந்த தொழிலாளி…. 25,000 அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு..!!

ஏ.டி.எம் கார்ட்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ரங்கராஜ்(37). இவருடைய செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்களின் ஏ.டி.எம் கார்டு கால அவகாசம் முடிவடைந்துள்ளது. எனவே உடனடியாக ஏ.டி.எம் கார்டை புதுப்பியுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏ.டி.எம் கார்டில் உள்ள 14 இலக்க எண்ணை உடனே சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய ரங்கராஜ் தனது ஏ.டி.எம் கார்டில் உள்ள 14 இலக்க எண்ணையும், வந்திருந்த ஒ.டி.பி எண்ணையும் கூறினார். இதைத் தொடர்ந்து முதல் தவணையாக அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 15,000 அடுத்த தவணை யாக ரூ 9,999 என ஆக மொத்தம் ரூ 24,999 வங்கியிலிருந்து எடுத்ததாக ரங்கராஜின் செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது.

இதையடுத்து அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது அந்த எண் துண்டிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரங்கராஜ் உடனடியாக கோவை புறநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி மேலாளருக்கு தான் ஏமாந்தது குறித்து தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கை வங்கி மேலாளர் முடக்கி வைப்பதாக கூறினார்.

இதுகுறித்து ரங்கராஜ் கிணத்துக்கடவு காவல் நிலையம் சென்று காவல்துறையினரிடம் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கூறும்படி சொன்னார்கள். இதைதொடர்ந்து ரங்கராஜ் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பணமோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியிருப்பதாவது, செல்போனில் யாராவது ஏ.டி.எம் நம்பர், பின் நம்பர் ஓ.டி.பி எண் வங்கி கணக்கு குறித்த விவரங்களை கேட்டால் பொதுமக்கள் கூற வேண்டாம். அதை மீறி கூறினால் உங்களுடைய வங்கி கணக்கில் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்து விடுவார்கள். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் செல்போன் மூலம் தங்களது வங்கி கணக்கை கூறி பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் செய்யலாம். உங்களது பணத்தை மீட்டுக் கொடுப்பார்கள் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |