கேரள மாநிலத்தில், 19 பேருக்கு, ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை, அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. இதையடுத்து, கேரளா எல்லை மாவட்டங்களான, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களில், ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவும், ஸிகா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா என, ஆய்வு செய்யும் பணியை, பொது சுகாதாரத்துறை துவக்கியுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், உலக அளவில், ஸிகா வைரஸ் வீரியமிக்க நோயாக, உலக சுகாதார நிறுவனத்தால், 2018ல் அறிவிக்க பட்டது.
முதுகெலும்பு இல்லா உயிரினமான, ஏடிஸ் கொசுவின் வாயிலாக தான், ஸிகா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், சிக்கன் குனியா, டெங்கு போன்ற வைரஸ்கள், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகின்றன.கர்ப்பிணியருக்கு, ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், தொப்புள் கொடி வாயிலாக, கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்தி, பிறக்கும் குழந்தை ஊனமாக பிறக்க அதிக வாய்ப்புள்ளது.
இவற்றை தவிர்க்க, எல்லை மாவட்டங்களில், தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, எல்லை மாவட்டங்களில் உள்ள, ‘ஏடிஸ்’ கொசுக்களை பிடித்து பரிசோதனை செய்தோம். அதில், ஸிகா, டெங்கு போன்ற பாதிப்பு இல்லை என, தெரிய வந்தது.தொடர்ந்து, அப்பகுதியில் கொசுக்களை பிடித்து ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.