விழுப்புரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு உதவி திட்டங்களை வழங்கியதோடு, ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1992-93 வருடங்களில் படித்த மாணவர்கள் தற்போது துபாய் மற்றும் இலங்கை என்று பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனை செய்துள்ளனர். இதன் முயற்சியாக அரசு பள்ளிக்கு கணினிகள் மற்றும் மேஜைகள் என சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கி வழங்கியுள்ளனர்.
மேலும் பாடம் நடத்திய 15 ஆசிரியர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு விருந்து வைத்ததோடு பாத பூஜை நடத்தி மலர்தூவி ஆசீர்வாதம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்து 1992 – 93 ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பங்களும் கலந்துகொண்டனர். இதுபோன்று மற்ற அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தங்கள் பள்ளிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.