கழிவுநீர் தொட்டிக்கு அருகில் கிடந்த பச்சிளம் குழந்தையை மருத்துவர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அரசு மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் மேலே துணிப்பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையில் ஏதோ அசைவது போல தெரிந்ததால் பொதுமக்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அப்போது துணிப்பைக்குள் தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிந்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை வீசி சென்ற தாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.