அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, பாராளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், கர்நாடக மாநில மகிளா மோர்ச்சா தலைவி கீதா விவேகானந்தா, தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா தாய் வாக் ஆகியோர் தமிழகம் வந்திருந்தனர். பின்னர் உயிரிழந்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜயசாந்தி, “பாரதிய ஜனதாவுக்கு மாணவியின் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் கிடையாது. இதுவரை திமுக லாவண்யாவின் மரணத்தை பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. அதேபோல் இதனை எந்த ஊடகமும் விவாதப் பொருளாக எடுத்து பேசவில்லை.
எனவே தான் பாரதிய ஜனதா கட்சி இதை பற்றி பேச வேண்டிய நிலை உருவானது. தமிழக முதல்வர் ஏன் லாவண்யாவின் மரணத்திற்கு இன்னும் வாய் திறக்கவில்லை ? அந்த இளம்பெண்ணின் மரணத்திற்கு என்ன பதில் ? அரசியல் ஆதாயம் கிடைக்கிறது என்று சொல்லத் தெரிந்த முதல்வர் ஸ்டாலின் தான் தற்போது அரசியலில் ஆதாயம் தேடுகிறார். மனதளவில் சிறிதுகூட அனுதாபம் இல்லை. திமுக இன்னும் மாறவே இல்லை. நான் திமுகவை பற்றி நன்றாகவே அறிவேன்” என்று கூறியுள்ளார்.