நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரியகோம்பை மலை கிராமம் அமைந்துள்ளது. இது குடியிருப்புகள் எதுவும் இல்லாத அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கன்னிவாடி வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு புதருக்குள் சிறுத்தை ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த வனத்துறையினர் அதன் காலில் ஏதேனும் காயம் ஏற்பட்டு இருக்குமோ என சந்தேகம் அடைந்தனர். இதனால் அந்த சிறுத்தையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர்கள் சதீஷ் சதாசிவம் தலைமையிலான குழுவினர் புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் அருகில் சென்று பார்த்தபோது அதன் காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் சிறுத்தையின் பின்பக்க கால் ஒன்று வலுவிழந்து காணப்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுத்தை நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது தெரியவந்துள்ளது.
எனவே சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் சிறுத்தையை ராட்சத கூண்டுக்குள் அடைத்து அதனை அமராவதிப்புதூரில் இருக்கும் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சிகிச்சை முடிந்த பிறகு சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, மனிதர்களுக்கு ஏற்படும் போலியோ, பக்கவாத நோயை போல சிறுத்தையும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்தில் ஒரு சிறுத்தை மட்டுமே இதுபோல நோயால் பாதிக்கப்படும். இந்நிலையில் ஒருவாரம் அல்லது 10 நாட்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தால் சிறுத்தையின் காலை சரி செய்து விடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.