3 பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள பாலசமுத்திரம் பகுதியில் ஹேமாவதி, ப்ரீத்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் உறவினருக்கும், முசிறி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் காவலருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் தொட்டியம் காவல்துறையினர் அழைத்துள்ளனர். இதனால் ப்ரீத்தி மற்றும் ஹேமாவதி தரப்பினர் காலை 11 மணி அளவில் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் மாலை வரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்நிலையத்திற்கு அழைத்து தங்களை அவமானப்படுத்தி விட்டதாக கூறி ப்ரீத்தி, ஹேமாவதி உள்ளிட்ட 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம் எங்களை ஏன் கேவலமாக நடத்துகிறீர்கள் என கேட்டு ஹேமாவதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மதியம் சாப்பிடாததால் ஹேமாவதி மயக்கமடைந்தார். இதனையடுத்து உடனடியாக ஹேமாவதியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.