பேருந்துகள் சரியாக இயக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சொக்கநாதிருப்பு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு தெப்பக்குளம், சிலைமான், திருப்புவனம், அல்லிநகரம் வழியாக ஒரு நாளைக்கு 6 முறை பேருந்துகள் இயங்கி வருகிறது.இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் வேறு பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாலை 3.45 மணி அளவில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்துகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களது கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பேருந்துகள் கிராமத்திற்கு சரியான நேரத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பேருந்துகள் சரியாக வருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.