சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரத்தில் குஷ்பூ ஈடுபட்டபோது கல்லூரி மாணவர் கேட்ட கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு களம் இறங்குகிறார். அவர் அங்கு சூளைமேடு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென்று குஷ்புவை பார்த்து, “மேடம்.. செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் கேன்சல் பண்ணுங்க”சத்தமிட்டு கூறினார். அதற்கு சிரித்தபடியே குஷ்பூ, “ஏன் தம்பி ஏன்?. எந்த காலேஜ்?”என கேள்வி கேட்டார். அதற்கு அதை நான் சொல்லவே மாட்டேன் என மாணவர் கூறினார். அதன்பிறகு குஷ்பூ சிரித்தபடியே, “ஏன் தம்பி இப்படி பண்ணுறீங்க.
கொரோனா காலத்தில் போதுமான ஓய்வு எடுத்து விட்டோம்” என்று கூறினார். அதனைக் கேட்ட மாணவர், “ஸ்கூல் பசங்களுக்கு மட்டும் ஆல் பாஸ் போட்டிங்க. அவங்க மட்டும் ஜாலியா இருக்காங்க. ஆனால் ஆன்லைன் கிளாஸ் என்று சொல்லி எங்கள டார்ச்சர் பண்றாங்க” என்று கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் மாணவர் எந்த கல்லூரி என்ற கேள்விக்கு அவர் பதில் அனுப்பவில்லை. அதனை சுதாகரித்துக் கொண்ட மாணவர் தனது சத்தத்தை குறைத்துக் கொண்டார். அதன்பிறகு குஷ்பு அங்கிருந்து சென்று விட்டார்.