பேருந்து நிறுத்தாத ஓட்டுநரிடம் பெண் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாட்டுவிளை பகுதியில் துப்புரவு பணியாளரான ஜெயராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது பணியை முடித்துவிட்டு நவஜீவன் காலனி பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்தை ஜெயராணி கை காட்டி நிறுத்தியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயராணி வேறு பேருந்தில் ஏறி குளச்சல் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த பேருந்து ஓட்டுநரிடம் தான் கை காட்டியும் பேருந்து ஏன் நிறுத்தவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் அந்த பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.