அரசை கவிழ்க்க எதற்காக செப்டம்பர் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பாஜக மீது சாடி இருக்கிறார்.
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தன்னுடைய 60-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-” மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் நேர்மறையாக இருக்கின்றன. மூன்று கட்சிகளின் அனுபவத்தோடு இந்த அரசு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எனது தலைமையிலான அரசாங்கத்தினுடைய எதிர்காலமானது எதிர்க்கட்சிகளின் கைகளில் கிடையாது.
இந்த கூட்டணி அரசின் சின்னமானது முச்சக்கர வண்டி(ஆட்டோ). இது ஏழைகளுக்காக செயல்படக்கூடிய வாகனம். வாகனத்தின் ஸ்டீயரிங் எனது கைகளில் இருக்கிறது. மற்ற இரு கட்சியும் (தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) பின்னால் அமர்ந்துள்ளார்கள். உங்களுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா அரசை கவிழ்ப்பதில் ஏதும் இன்பம் இருந்தால் இப்போதே கவிழ்த்து விடுங்கள். அதற்காக செப்டம்பர், அக்டோபர் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? சிலர் ஆக்கப்பூர்வமான பணியை செய்வதில் இன்பம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் சிலர் கட்சியை அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
மகா விகாஷ் அகாடி கூட்டணி ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் கவிழ்த்தால் மட்டும் அது ஜனநாயகமாகி விடுமா? நான் எந்த கொள்கையில் இருந்து பிறழவில்லை. ஒரு கூட்டணியில் தான் நான் சேர்ந்து இருக்கிறேன். இந்த கூட்டணி அரசில் காங்கிரஸ் புறக்கணிக்கப்படும் பிரச்சினை அக்கட்சி தலைவர்களுடனான சந்திப்புக்கு பின் தீர்க்கப்பட்டுள்ளது. சரத்பவாருடன் எனக்கு நல்ல ஒருங்கிணைப்பு இருக்கிறது. நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.