நீலகிரி தார் என அழைக்கப்படும் வரையாடுகளின் உறைவிடமான இரவிகுளம், ராஜமலை தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரையாடுகளின் இருப்பிடமான ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. எனவே www.eravikulamnationalpark.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே நுழைவுச் சீட்டுகள் கிடைக்கும்.
ஸ்லாட்களை முன்பதிவு செய்த ஏழு நிமிடங்களுக்குள் உறுதிப்படுத்தல் செய்தியை வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறலாம். ஐந்தாவது மைலில் உள்ள நுழைவுப் புள்ளியிலிருந்து பெறப்பட்ட செய்தியில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்த பிறகு, பார்வையாளர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் ராஜமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 5-வது மைலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.
இது பார்க்கிங் ஏரியாவில் இருந்தே டிக்கெட் முன்பதிவு செய்ய பார்வையாளர்களுக்கு உதவும். சட்டமூணார் மற்றும் பெரியவாரை சோதனைச் சாவடிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைன் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என வனவிலங்கு காப்பாளர் எஸ்.வி.வினோத், உதவி வனவிலங்கு காப்பாளர் ஜாப் ஜெ.நேரியம்பரம்பில் ஆகியோர் தெரிவித்தனர்.
வரையாடுகளின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு தேசிய பூங்கா மூடப்பட்டது. நாள் ஒன்றுக்கு 2,880 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மூணார் சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள் நிச்சயம் பார்க்க விரும்பும் பகுதியாக ராஜமலை உள்ளது. மூணார் நகரில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் சுமார் 8 கி.மீ. தொலைவில் ராஜமலை உள்ளது. இங்குள்ள அரியவகை வரையாடுகள் தேசிய அளவில் பிரசித்தி பெற்றவை ஆகும்.
நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையவையாகும். மிகவும் அழிந்து வரும் இனங்களில் ஒன்றான இந்த விலங்கு தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு என்பதும் தமிழ்நாட்டில் சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.