கலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். இந்த விருது மொத்தம் 15 பேருக்கு வழங்கப்படும். இந்த விருது தகுதியின் அடிப்படையில் 5 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அதாவது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கலைஇளமணி விருதும், 19-35 வயதுடையவர்களுக்கு கலைவளர் மணி விருதும், 36-50 வயதுடையவர்களுக்கு கலைச்சுடர் மணி விருதும், 51-65 வயதுடையவர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கலைமுதுமணி விருதும் வழங்கப்படும். இந்த விருது வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு நியமிக்கப்படும்.
இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் தகுதியானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள், செவ்வியல் கலைகள் மற்றும் முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு தேசிய மற்றும் மாநில விருது, மாவட்ட கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகளைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 29-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்தை வயது மற்றும் கலை தொடர்பான சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்பங்களை உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டலம் கயிறு சாலை அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.