அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள “வலிமை” படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பிலும், போனி கபூர் தயாரிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் “வலிமை” படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான “வலிமை” டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த திடீர் அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் “வலிமை” படக்குழு திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய உறுதியாக இருந்தது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படக்குழு படத்தை தள்ளி வைக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவை ரயில் நிலையம் அருகே அஜித் ரசிகர்கள் “வலிமை” படம் வெளியாகாத வேதனையில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் “ஏமாற்றம்.! ஏமாற்றம்.!! ஏமாற்றம்.!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது…. It’s ok” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.