தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில், கரும்பு மற்றும் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசு பொங்கல் பரிசுகள் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இதன் மூலம் அரசுக்கு சுமார் 2356.67 கோடி செலவீனம் ஏற்படும் எனவும் தெரிவித்தது. தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு இடம் பெறும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருக்கு தலா ரூ 5000 ஆக உயர்த்தியும், செங்கரும்பையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போல 21 பொருட்களுடன் கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பரிசுத்தொகுப்பில் கரும்பையும் சேர்க்கவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பலரும் செங்கரும்பு வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்,அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹ 1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் 2500 ரூபாயாவது உயர்த்தி வழங்கிட வேண்டும்.
மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கிட வேண்டும். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் இந்த பொங்கல் தித்திக்கும் பொங்கலாக அமைய இந்த அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்,அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும் pic.twitter.com/u0ohLpPvsx— Premallatha Vijayakant (@imPremallatha) December 26, 2022