முல்லைப்பெரியாறு பேபி அணையில் மரங்களை அகற்றும் விவகாரத்தில் கேரளாவின் முரண்பட்ட நிலைப்பாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அதற்கு கீழ் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. கேரள வனத் துறை சில நாட்களுக்கு முன்பு மரங்களை வெட்ட அனுமதி அளித்தது. இதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் முக. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் மரங்களை வெட்ட வனத்துறை அனுமதியை கேரள அரசு தடை விதித்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் முதலமைச்சர் அல்லது தொடர்புடைய அமைச்சர்களின் ஒப்புதலைப் பெறாமல் தன்னிச்சையாக அனுமதி அளித்துவிட்டதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கேரள அரசின் முரண்பட்ட நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளளார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஒப்புதலின்றி அதிகாரிகள் அனுமதி அளிக்க முடியுமா என்றும், எந்த வகையான நிர்வாகம் இது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.