விசாரணைக்கு பயந்து கொத்தனார் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டியில் கொத்தனாரான செந்தில்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வத்தலகுண்டு, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த செலவில் வீடு கட்டி தருவதாக தனியார் தொண்டு நிறுவனத்தினர் பிரச்சாரம் செய்தனர். பின்னர் கட்டிடம் கட்டுவதற்காக கொத்தனார் தேவை என அறிவிக்கப்பட்டதால் செந்தில் அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் கல்லுப்பட்டி, வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் பொதுமக்களை வீடு கட்டும் திட்டத்தில் சேர்த்து விடுமாறு செந்திலிடம் அந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர். மேலும் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை வசூல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை நம்பி செந்தில் தனக்கு தெரிந்தவர்களை திட்டத்தில் சேர்த்து முன் பணம் வசூல் செய்து தொண்டு நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பணம் கொடுத்தவர்கள் செந்திலை தொந்தரவு செய்ததால் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்கிடையில் செந்தில் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகார் தொடர்பாக நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராகுமாறு செந்திலுக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் செந்தில் தனது மனைவி ராணி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு செந்திலை பரிசோதனை செய்த டாக்டர் அவர் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.