கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமநாயக்கன் ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது நோய் தொற்று காலம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் மாநகராட்சியின் தனி வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் சில தனியார் மருத்துவமனைகள் அதன் மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக இரவோடு இரவாக ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் கொட்டிவிட்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் காலில் பட்டு சில நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற சமூக பொறுப்பற்ற செயலில் ஈடுபடும் மர்ம நபர்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.