ஏரியில் வாலிபர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மதுரவாயல் அடுத்துள்ள நொளம்பூர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவருடைய மகன் பட்டதாரியான 24 வயதுடைய ராஜ்பரத். இவர் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதனால் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவருடைய நண்பருக்கு கடந்த 30-ம் தேதி இரவு செல்போனில் தகவல் அளித்துள்ளார். இத்தகவல் அறிந்த போரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் குதித்த வாலிபரை இரவு முழுவதும் 20-க்கும் அதிகமானோர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
அதன் பின் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ஏரியிலிருந்து இறந்த நிலையில் ராஜ்பரத் உடலை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். இதனையடுத்து ராஜ்பரத் உடலை பிரேத பரிசோதனைக்காக போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.