Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானம் விபத்து…. 16 பேர் பலி, 15 பேர் கவலைக்கிடம்… 123 பேர் சிகிச்சை

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக, அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் இரு விமானிகள், ஐந்து ஊழியர்கள், 10 குழந்தைகள், 174 பயணிகள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் இந்திய விமான படையின் முன்னாள் தளபதி தீபக் வசந்த் சதே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயமடைந்த 123 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பேரிடர் மீட்புக் குழுவை விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவித்தியிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விபத்தில் தான் மிகவும் நேசிக்கும் நபர்களை இழந்தவர்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பேசினேன், துறை சார் அலுவலர்கள் அருகிலிருக்கின்றனர். இது தொடர்பாக தேவையான அத்துனை உதவிகளையும் அவர்கள் செய்து தருவார்கள் என பதிவிட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விபத்து குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |