மலை பிரதேசமாக உள்ள சேலம் மாவட்டத்தின் ஏற்காடு தொகுதி முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு முக்கிய பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பாக்கு மற்றும் தென்னை வளர்ப்பும் அது சார்ந்த தொழில்களும் இங்கு அதிகம். கருமந்துறை பகுதியில் விளையும் கடுக்காய் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பழங்கியினருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 தொகுதிகளில் ஏற்காடு ஓன்று.
ஏற்காடு தொகுதியில் அதிக அளவாக அதிமுக 8 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஏற்காடு தொகுதியின் தற்போதய எம்எல்ஏ ஜி. சித்ரா. ஏற்காடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை2,82,656 பேர். ஏற்காட்டில் அதிக அளவில் விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்குக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், வன விலங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தலை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
விளைவிக்கப்படும் பொருள்களை விற்பனை செய்ய வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கை. வாழப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் வாழப்பாடியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. மேட்டூர் அணையில் இருந்து வெளி வரும் உபரி நீரை ஆணைமடுவு அணையில் தேக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அரசு கலைக்கல்லூரி உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். சேலம் உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலையில் முறையாக இணைப்பு சாலைகள் அமைக்கப்டாததால் நாள்தொரும் விபத்துகள் நிகழ்வதாக மக்கள் கூறுகின்றனர். சுற்றுலா தளமாக எழில் கொஞ்சும் திகழும் ஏற்காடு பகுதியில் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .