சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பெற்று செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரனோ வைரஸ் தொற்று பரவலை தடுக்க 31/08/2020 அன்றுவரை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் வருகின்ற 30/09/2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையே செல்வதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சேலம் மாவட்டம் முழுவதும் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு செல்வதற்கு, வெளியூர் சுற்றுலா பயணிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இ பாஸ் பெற்று தான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். ஆதலால் ஏற்காடு மலை சுற்றுலா தளத்திற்கு செல்வதற்கு வெளியூர் பயணிகளுக்கு இ பாஸ் அவசியமாகிறது.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பாதுகாப்பு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் எனவும், 144 தடை உத்தரவு முடியும்வரை அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.