டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் நிறைவுரை ஆற்றிய ஸ்டாலின்,
வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை ஆனால் ஒன்று இந்தப் போராட்டம் என்பது திடீரென நாங்கள் நடத்தவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு முடிவு செய்து நடத்திய போராட்டம் இது. ஆனால் எப்போதோ நாடாளுமன்றத்தில் இந்த அரசு கடுமையான சட்டத்தை மூன்று வேளாண் சட்டத்தை நிறைவேற்றி முடித்த மறுநாளே நமது தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அண்ணா அறிவாலயத்தில் கூட்டத்தை கூட்டினோம். உடனடியாக கண்டித்து தீர்மானம் போட்டோம். நமது கண்டனத்தை தெரிவிப்போம் உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என எடுத்துக் கூறினோம்.
அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டத் தலைநகரிலும் போராட்டத்தை நடத்தினோம். அதற்குப் பிறகு தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக மட்டுமில்லாமல் தனித்தனியாக அந்தந்த கட்சிகளின் வசதிக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப போராட்டங்களை நடத்தியுள்ளது .அதேபோன்று கடந்த ஐந்தாம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. கையில் கருப்புக்கொடி ஏந்தி அந்த போராட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடந்த அந்த சம்பவங்கள் உங்களுக்கே தெரிந்த ஒன்று.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல்… சகித்துக் கொள்ள முடியாமல்…. தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து அவர் பேசும் பேச்சுக்களை நாம் பார்க்கிறோம். இன்று மாலை நாளிதழில் பார்த்தேன். முதலமைச்சர் ஊர்ஊராக செல்கிறார் என்று ஊர் ஊராக யாரைப் பார்க்க செல்கிறார். மக்களை பார்க்கவா? அவர்களை பார்த்தால் தெரியும். உங்களது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.
ஆய்வு என்ற பெயரில் கட்சிக்காரர்களை அமர வைத்துக் கொண்டு ஒருநாள் கட்டுபாடுகளை மீறி ஆய்வு நடத்த செல்கிறோம் என்று கூறி பின்னர் பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறிவிட்டு இவராகவே ஒரு பதில் கூறிக் கொண்டிருப்பார். குறிப்பாக என்னை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவருக்கு வேலை இல்லையா?என்று. எனது வேலை உங்கள் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவது தான் அதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் வேலை.
காலை, மாலை, ராத்திரி, விடியற்காலை என அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பதாக கூறுகிறார். அறிக்கை விடாமல் நான் வீட்டில் அமர்ந்து கொண்டு அவியலா செய்து கொண்டிருக்க முடியும். அவர் எனக்கு பெரிய பட்டம் ஒன்றை கொடுத்தார் அறிக்கை நாயகன் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். அறிக்கை நாயகன் என்ற பட்டத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்ட நான் உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்தேன் ஞாபகம் உள்ளதா ஊழல் நாயகன் அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா ரவுடி தான் தன்னை நான் பெரிய ரவுடி என்று கூறிக் கொள்வார்கள் என முதல்வரை விமர்சித்தார்.