ஏலச்சீட்டு நடத்தி பணத்தை அபேஸ் செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் வி. மாதேப்பள்ளி கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பாகலூர், பேரிகை, ஓசூர், கர்நாடகா, ஆந்திராவில் சேர்ந்த நிறைய பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு மாதங்களாக கட்டிய சீட்டு பணத்தை கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.
இத்தகவலை அறிந்த சீட்டு பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமான பொதுமக்கள் நேற்று கிருஷ்ணமூர்த்தி வீட்டை முற்றுகை இட்டுள்ளனர்.
அதன்பின் அவர்கள் கிருஷ்ணகிரி – வேப்பனப்பள்ளி பிரதான ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இத்தகவலை அறிந்த வேப்பனப்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சீட்டு பணம் மோசடி குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தார்கள்.
இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கிருஷ்ணமூர்த்தியை கண்டுபிடித்து உங்களுடைய பணத்தை மீட்டு தருகிறோம் என்று உறுதி கொடுத்தார். இதனை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.