ஈரோட்டில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஹேமச்சந்திரன். இவர் அரசு நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டார். பின் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று கேட்டுள்ளனர். அப்பொழுது பள்ளியில் மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக கூறியுள்ளனர்.
பின் வெகு நேரமாகியும் மாணவன் வீட்டுக்கு வராததால் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடினார்கள். இதனிடையில் கருவில்பாறைவலசு பகுதியில் குளத்தின் கரையோரமாக மாணவனின் பள்ளி சீருடை கிடந்துள்ளது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள்.
வெகு நேர தேடலுக்குப் பிறகு இறந்த நிலையில் மாணவன் ஹேமச்சந்திரன் உடல் மீட்கப்பட்டது. பின் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பள்ளி முடிந்ததும் ஹேமச்சந்திரன் குளத்தில் குளிக்கச் சென்று அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்துள்ளது. மாணவனின் உடலை பார்த்த பெற்றோர்கள் கதறி கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.