மிகவும் பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களை சமீபத்தில் நியமித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 25 பேரை குழு உறுப்பினர்களாகவும், 50 பேரை சிறப்பு அழைப்பாளர்களாகவும் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்தார். இதில் தமிழகத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ நந்தகுமாரும் ஒருவராவார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டபோது, ஏழுமலையான் முன் பதவியேற்றது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். மேலும் கொரோனா பாதிப்புகள் குறைந்த பின்னர் தமிழக பக்தர்களுக்கு என்னால் முடிந்த வசதிகளை செய்து தருவேன் என்று கூறினார்.
இந்நிலையில் அறங்காவலர் குழுவுக்கு மிக அதிகப்படியான நபர்களை நியமித்திருப்பதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தினசரி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 25000 பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் இலவச தரிசனத்திற்காக தினமும் 2000 டோக்கன்கள் வீதம் சித்தூர் மாவட்டத்திலிருந்து வருவோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடியவிரைவில் இந்த டோக்கன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், பிற மாவட்ட/மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் திரு.ஒய்.வி.சுப்பா ரெட்டி சில முக்கிய தகவல்களை கூறினார். ஏழுமலையானின் தீவிர பக்தராக விளங்கியவரான தாளப்பாக்கம் அன்னமய்யா, வெங்கடேஸ்வர சுவாமிகளைப் பற்றி எழுதிய 4 ஆயிரம் கீர்த்தனைகளை தேவஸ்தானம் அச்சிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இளம் தலைமுறையினரின் தனித்திறனை வெளிக்கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவஸ்தான தொலைக்காட்சி மூலமாக 18 முதல் 25 வயதிலான ஆந்திர இளைஞர்களுக்கு அதிகோ அல் அதிகோ என்ற பாட்டுப்போட்டி நடத்தப்படும் எனவும், அடுத்த கட்டமாக கன்னடம், இந்தி, தமிழிலும் இந்த போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனத்திற்காக ஆன்லைனில் ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் முயற்சிப்பதால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி ரிலையன்ஸ் ஜியோ மூலமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த பணிகள் முடிவடைந்ததும் பக்தர்கள் தேவஸ்தான இணையத்தை சிரமமின்றி பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.