திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இரண்டாவது மலைப் பாதையை வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையால், மலைப் பாதை மற்றும் அலிபிரி நடைபாதை ஆகியவை பலத்த சேதமடைந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பற்ற சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.இதையடுத்து ஐஐடி வல்லுநர்கள் உதவியுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீண்ட கால அடிப்படையில் வலுவான முறையில் பாதைகளை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையில் இரண்டாவது மற்றும் முதல் மலைப் பாதைக்கு இடையிலான இணைப்பு சாலை மூலம் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு ஒரே பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் இரண்டாவது மலைப் பாதையை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார். விரைவாக பணிகளை முடித்துக் கொடுத்த தேவஸ்தான பொறியியல் துறை மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களை தர்மா ரெட்டி பாராட்டினார். வைகுண்ட ஏகாதேசி திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக மலைப் பாதை சீரமைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.
தர்மா ரெட்டி உத்தரவின் பேரில், 40 நாட்களுக்கு பின்னர் ஜி.என்.சி டோல்கேட் வரை மலைப் பாதை செயல்பாட்டிற்கு வந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தர்மா ரெட்டி, “கனமழையால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகள் காரணமாக டிசம்பர் 1-ஆம் தேதி மலைப்பாதை மூடப்பட்டது. எங்களது பொறியாளர்கள் இரவு பகல் பாராமல் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். AFCON அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் உரிய நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது மலைப் பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான தலைவர் மற்றும் செயல் அதிகாரி சார்பில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டவர்களை பாராட்டுகிறேன். இனி எந்தவித பிரச்சினையும் இன்றி பக்தர்கள் பயணிக்கலாம்.” என்று தெரிவித்தார்.