திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் காரணமாக தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதோடு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு பிறகு தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இனிவரும் காலங்களிலும் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனிலேயே வழங்கலாம் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 17ஆம் தேதி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சந்திப்பின்போது இது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.