ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தற்போது முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு மாதம் 20ஆம் தேதி கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் ரூபாய் 300 செலுத்தி டிக்கெட் பெற்று வருகின்றார்கள். அதேபோல தங்கும் அறைகளும் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பெருமளவு தரிசனம் செய்ய வரவில்லை.
தற்போது இயல்புநிலை திரும்பி இருப்பதால் மக்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மே மாதத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வருகை தந்துள்ளனர். அதிகரித்த பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தானம் காவல்துறையும் திணறியது. மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோயில் உண்டியலில் வருவாயும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களாக ஆந்திரா கர்நாடகா, தெலுங்கு, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் திருப்பதியில் பக்தர்கள் வருகை குறைந்து இருக்கின்றது. தற்போது 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மட்டுமே பக்தர்கள் வருகை புரிகின்றார்கள். அதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் 3 முதல் 4 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விரைவாக தரிசனம் செய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மட்டும் திருப்பதி உண்டியலில் 4.60 கோடி காணிக்கை இருக்கிறது. மேலும் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பதியில் இரண்டு வருடங்களுக்கு பின் பிரம்மோற்சவ விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.