சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஃப் 7 ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. இந்நிலையில் திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சொல்கின்றனர்.
திருப்பதியில் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக திருப்பதியில் முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.