திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச நேரம் ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. திருப்பதி அலிப்பிரியல் பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் போன்ற இடங்களில் இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கபடுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இன்றும், நாளையும் இலவச தரிசன நேர ஒதுக்கீட்டு டோக்கன்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று நள்ளிரவு முதல் திருப்பதியில் குவிய தொடங்கியுள்ளனர். அதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தேவஸ்தான அதிகாரிகள் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கும் கவுண்டர்களை மீண்டும் திறப்பது பற்றி இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் பக்தர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். எனவே தேவஸ்தான அதிகாரிகள் முறையான அறிவிப்பு வெளியிட்டு பக்தர்களின் குழப்பத்தை போக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.