நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசியதாவது, ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். அரியலூர் அனிதா தொடங்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். ஏழை மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதை நீட் தேர்வு தடுக்கிறது என்று பேசினார்.