இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திட்டங்களுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்டது தான் “தி சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா”. இந்த இசைக் குழுவில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரமான இசைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 14 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசைக் குழுவில், அப்போது இணைந்த சிறுவர், சிறுமிகள் அனைவரும் தற்போது “பொன்னியின் செல்வன்” உள்ளிட்ட படங்களின் பெயர் பட்டியலில் இடம்பிடித்து விட்டனர்.
மேலும் மிக பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சிகளிலும் “சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா” இசைக்குழுவைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு அசத்தினர். இந்நிலையில் சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவில் இப்போது பயின்றுவரும் சிறுவர், சிறுமியர்கள் முதன் முறையாக குழந்தைகள் தினத்தையொட்டி தங்களது பொது கச்சேரியை அரங்கேற்றி இருக்கின்றனர்.
சென்னை ஈசிஆர் சாலையிலுள்ள தக்ஷின சித்ரா அருங்காட்சியகத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. அவர்களோடு சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவின் முன்னாள் மாணவர்களும், கே.எம். இசைக்கல்லூரி மாணவர்களும் இணைந்து இசைமேடையை அலங்கரித்தனர். அத்துடன் பாடகர் திருமூர்த்தியும் அவர்களோடு இணைந்து பாடல்களை பாடி அசத்தினார். அதாவது, நாட்டுப்புற பாடல்களோடு, மேற்கத்திய இசைக் கருவிகளை சேர்த்து மாணவர்கள் நிகழ்த்திய இசைக் கச்சேரி காண்போரை கவர்ந்தது.