Categories
கால் பந்து விளையாட்டு

ஏ.எஃப்.சி. கோப்பை: அதிரடியாக ஆடி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு எஃப்.சி.

ஏ.எஃப்.சி. கோப்பை பரோ அணியை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எஃப்.சி. அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் ஏ.எஃப்.சி. கோப்பைத் தொடர் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கியது. இதன் நேற்றைய போட்டியில் இந்தியாவின் பெங்களூரு எஃப்.சி. அணி, பூடானின் பரோ அணியை எதிர்கொண்டது.

இந்த இரு அணிகளுக்கு இடையே முன்னதாக நடந்த ஆட்டத்தில் பெங்களுரூ எஃப்.சி. அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்ததால், இந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதில் ஆட்டம் தொடங்கியது முதலே பெங்களுரூ எஃப்.சி. அணியின் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்திலேயே பெங்களூரு அணியின் ஹவுகிப் முதல் கோலை அடிக்க, தொடர்ந்து 14ஆவது நிமிடத்தில் ஜுவனன் இரண்டாவது கோலை அடித்தார்.

இதற்குப் பதிலடியாக பரோ அணியின் சென்சோ அந்த அணிக்காக முதல் கோலை அடிக்க ஆட்டம் 2-1 என்று பரபரப்பாகியது. இதையடுத்து ஆட்டம் முழுவதும் பெங்களுரூ அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அதில் 26ஆவது நிமிடத்தில் ஹவுகிப் மூன்றாவது கோலையும் 29ஆவது நிமிடத்தில் பிரவுன் நான்காவது கோலையும் அடித்தனர். இதனால் முதல் பாதியின் முடிவில் பெங்களுரூ அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரவுன் 54ஆவது நிமிடத்திலும் 64ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தார். பின்னர் மீண்டும் 66ஆவது நிமிடத்தில் ஹவுகிப் பெங்களுரூ அணிக்காக 7ஆவது கோலையும் 79ஆவது நிமிடத்தில் நிலி 8ஆவது கோலையும் 85ஆவது நிமிடத்தில் மீண்டும் ஹவுகிப் 9ஆவது கோலையும் அடித்தனர். இதனால் பெங்களுரூ அணி ஆட்ட நேர முடிவில் 9-1 என்ற கோல் கணக்கில் பரோ அணியை வீழ்த்தியது.

மேலும் முதல் ஆட்டத்தையும் சேர்த்து 10-1 என்ற கணக்கில் பரோ அணியை வீழ்த்தி பெங்களூரு எஃப்.சி. அணி ஏ.எஃப்.சி. கோப்பையின் ப்ளே- ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

Categories

Tech |