சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் பிரபல வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இயந்திரம் பழுதானதால் அதை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். இந்நிலையில் அங்கிருந்த இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏடிஎம். கார்டுகளிலுள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் “ஸ்கிம்மர்” கருவி பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் சென்னை பழையவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மனோகர் மற்றும் அவரது மகன் ஆனந்த் ஆகிய இருவரும் ஏ.டி.எம். இயந்திரத்தில் அந்த கருவியை பொருத்தியது தெரியவந்தது. அதன்பின் மனோகர் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் “வண்ணாரப் பேட்டை பகுதியில் மனோகர், ஜவுளிக்கடை நடத்தி வந்திருக்கிறார். எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காமல் மாறாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக மனோகர் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிதவித்தார். அதே சமயத்தில் அவருடைய மகன் ஆனந்த் அல்பேனியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இதனிடையில் மனோகருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆனந்த் மருத்துவபடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
பின் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு அவர் இந்தியா திரும்பினார். அதன்பிறகு ஆனந்த் டெல்லியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அந்நிறுவனத்திலுள்ள தொடர்புகள் வாயிலாக அந்தகருவி ஆனந்துக்கு கிடைத்துள்ளது. அதன்பின் சென்னை வந்த ஆனந்த் தன் தந்தையுடன் அந்த வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் அக்கருவியை பொருத்தியது தெரியவந்தது. இவ்வழக்கில் மேன் குற்றவாளியான ஆனந்த் தலைமறைவாக இருக்கிறார். இதனால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்ட பிறகே வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற விவரம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.