கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெய்கணேஷ் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பீளமேடு உள்ளிட்ட இடங்களில் எங்கள் வங்கியின் ஏ.டி.எம் மையங்கள் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மர்ம நபர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளார். இதனையடுத்து பணம் வரும் நேரத்தில் அந்த நபர் எந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் பாதி வந்த நிலையில் இருக்கும் அந்த பணத்தை அவர் எடுத்து கொண்டார்.
இந்நிலையில் எந்திரம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்காதது போல் காட்டும். இதனை பயன்படுத்தி அந்த நபர் 3 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை 39 பண பரிவர்த்தனை மூலம் எடுத்து மோசடி செய்துள்ளார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் பெயரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.