கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாரதிநகரில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வங்கிகளுக்கு சென்று ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக பணத்தை வாங்கி வரும் வேலைகளை செய்து வந்துள்ளார். அந்த பணத்தை ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக ஊழியர்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. இதுகுறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினேன். அப்போது 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை பிரகாஷ் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.